தமிழக செய்திகள்

பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு

பட்டாசு ஆலைகளில் நடக்கும் வெடி விபத்துகளைத் தவிர்க்கும் நடவடிக்கையாக மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இப்போதே சதம் அடித்து வருகிறது. போகப்போக, வெயில் தாக்கம் இன்னும் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கோடை வெயில் அதிகரித்துள்ளதால் விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டாசுக்கான ரசாயன மருந்து கலவை பணியினை காலை நேரங்களில் முடிக்கவும், மிகவும் அபாயகரமான ரசாயன கலவை பணிகளை காலை 6 மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்குள் முடித்திடவும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பட்டாசு ஆலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

பட்டாசு செய்யும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது. பட்டாசுகளை மொத்தமாக வாங்கும் நபர்களின் விவரங்கள், அடையாள அட்டைகளை பெற்று சேகரித்து வைக்க வேண்டும். இதனை மீறினால் பட்டாசு தயாரிப்பு கூடத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். மேலும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.