தமிழக செய்திகள்

‘மத்திய-மாநில அரசுகள் தமிழ்நாட்டை ஏமாற்றி வருகின்றன’ மு.க.ஸ்டாலின் பேட்டி

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய - மாநில அரசுகள் தமிழ்நாட்டை ஏமாற்றி வருகின்றன’ என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

நாளை (இன்று) மற்றும் நாளை மறுநாள் (நாளை) ஆகிய இருநாட்கள், தி.மு.க. வின் ஈரோடு மண்டல மாநாடு நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டில் தி.மு.க.வின் முன்னணிப் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள்.

குறிப்பாக, மத்திய - மாநில அரசுகளின் அக்கிரமங்கள், அவை செய்துவரும் அநியாயங்கள், நிர்வாக சீர்கேடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அதேநேரத்தில் மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் அடிப்படையில் பல்வேறு தீர்மானங்களையும் அந்த மாநாட்டில் நாங்கள் நிறைவேற்ற இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி:- தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனை கொண்டாடுகிறார்களே?.

பதில்:- ஓராண்டு சாதனை கொண்டாடும் அருகதை, தகுதி எல்லாம் இந்த அ.தி. மு.க. ஆட்சிக்கு கிடையாது.

கேள்வி:- தி.மு.க. தொடர்ந்த வழக்கினால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாமல் இருப்பதால், மத்திய அரசின் ரூ.1,950 கோடி நிதியை பெற முடியவில்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறாரே?.

பதில்:- ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது போல, உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் போனதற்கு தி.மு.க. தான் காரணம் என்று துறையின் அமைச்சர் சொல்கிறார். உள்ளபடியே, அதுவொரு அப்பட்டமான பொய். நியாயமாக அவர் மீது அவதூறு வழக்கு போட வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இந்த ஆட்சி செய்து கொண்டிருக்கும் பல தில்லுமுல்லுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அதையெல்லாம் சரிசெய்து, தேர்தலை முறையாக நடத்த வேண்டும், என்றுதான் நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றோம். அதனடிப்படையில் ஐகோர்ட்டும் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த அரசும், தேர்தல் ஆணையமும் ஐகோர்ட்டு இட்டுள்ள உத்தரவுகளை இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் தான் இந்தத் தேர்தல் நடைபெறவில்லை. அவர்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் துளியளவுகூட இல்லை. எனவே, அதை மூடிமறைக்க, தி.மு.க.தான் காரணம் என்று சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. எனவே, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பெற முடியாத அவலநிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

கேள்வி:- தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாட்டில் தலைவர் கருணாநிதி கலந்துகொள்வாரா?.

பதில்:- தலைவர் கருணாநிதி மாநாட்டில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

கேள்வி:- தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவே, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை அறிவித்து இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்து இருக்கிறாரே?.

பதில்:- அவர் திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு கொடுத்துள்ள தீர்ப்பு என்ன?. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெளிவாக இருக்கிறது. எனவே, நாங்கள் தொடர்ந்து அதனை வலியுறுத்தி, அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, தீர்மானம் நிறைவேற்றி, பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டிருக்கிறோம். இதுவரையிலும் பிரதமர் அதற்கு அனுமதி தரவில்லை. எனவே, சட்டமன்றத்திலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பிரதமரை சந்திக்க வேண்டும் என்று, ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், அவர்கள் செவி சாய்க்கவில்லை.

நேற்று கூட சட்டமன்றத்தில் நான் இந்தப் பிரச்சினையை எழுப்பிய நேரத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 29-ந் தேதி வரை கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறார். மத்திய அரசிடம் இந்த அ.தி.மு.க. அரசு மண்டியிட்டு சரணாகதி அடைந்திருக்கிறது. எனவே, நிச்சயமாக இதற்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதால், தமிழ்நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில், கமிஷன் வாங்குவது, கரப்சன் செய்வது என்ற அடிப்படையில் தான் அரசை நடத்துகிறார்களே தவிர, மக்கள் பிரச்சினை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.