எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு ஆசியாவில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய ஏற்றுமதித் துறை வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. சுமார் 45,000 இந்தியச் சரக்கு பெட்டகங்கள் சர்வதேசத் துறைமுகங்களிலும், நடுக்கடலிலும் சிக்கித் தவிக்கின்றன. இதில் சுமார் 1 பில்லியன் டாலர் முதல் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் முடங்கிக்கிடப்பது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவாகும். பல லட்சம் டன் உணவுப் பொருட்கள் தேங்கியுள்ளதால், ஏற்றுமதியாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் பொருளாதாரத் தூண்களாகத் திகழும் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் இந்தப் போரினால் கடுமையாக நிலைகுலைந்துள்ளன. திருப்பூரின் பின்னலாடைத் துறை, கோவையின் பொறியியல் சார்ந்த தொழில் நிறுவனங்கள், சிவகாசியின் அச்சு தொழில்கள் எனப் பல துறைகள் முடங்கியுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்லும் ஏற்றுமதி வர்த்தகமும் இந்த நெருக்கடியால் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் உரிய நேரத்தில் சென்றடையாததால், தமிழகத் தொழில்துறையினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, கப்பல் நிறுவனங்கள் ‘அவசர கால கூடுதல் கட்டணம்’ என்ற பெயரில் கட்டணத்தை 5 மடங்கு வரை உயர்த்தியுள்ளன. சாதாரண நாட்களில் 800 டாலராக இருந்த கொள்கலன் கட்டணம், தற்போது 5,000 டாலர் வரை வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய கூடுதல் சுமை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதிக்கப்போவதில்லை; மாறாக, தங்கள் உழைப்பை நம்பியிருக்கும் விவசாயிகள், சிறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதே இந்த பாரம் விழுகிறது. உலக அரசியல் மோதல்களின் விளைவுகளைச் சாமானிய இந்திய மக்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியது.
இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்த விவகாரத்தில் வெறும் பார்வையாளராக இருக்காமல், உடனடியாகத் தலையிட வேண்டும். இந்திய அரசுக்குச் சொந்தமான துறைமுகங்களில் தேங்கியுள்ள 20,000-க்கும் மேற்பட்ட கொள்கலன்களை விரைவாக வெளியேற்றவும், மாற்றுப் பாதைகளை உறுதி செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போரினால் நஷ்டமடையும் சிறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு சிறப்பு நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
நாட்டின் நலனையும், மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் முன்னிறுத்திய, எந்த அழுத்தத்திற்கும் பணியாத வலுவான வெளியுறவுக் கொள்கை இன்றைய சூழலில் மிக அவசியமாகும். போர்ச் சூழலைக் காரணம் காட்டி இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, நடுக்கடலில் தவிக்கும் இந்தியச் சரக்குகளைப் பாதுகாப்பாகக் கொண்டு வரவும், ஏற்றுமதித் துறையை முடக்கத்திலிருந்து மீட்கவும் ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.