சென்னை,
மத்திய வரிகள் பகிர்வுக்கான அளவுகோல் எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது என்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று, மத்திய அரசின் வரிப் பகிர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்யக் கோரி தனித் தீர்மானத்தை அரசு கொண்டு வந்தது. இந்த தனித் தீர்மானத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் கொண்டுவந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளை நினைவுகூர்ந்தும், மாநிலங்கள் தங்களது அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்பதை அரசு உணர்ந்துள்ளது.
தமிழ்நாடு மாநிலம் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டும், இப்பேரவையில் இந்திய அரசை பின்வருமாறு வலியுறுத்தித் தீர்மானிக்கிறது:-
இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகள், சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு இணங்க, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய நிதிப் பகிர்வினை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில், மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, புறநிலையற்ற மற்றும் சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது
மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் மத்திய வரிகளின் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது, தமிழ்நாடு மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, இந்த தீர்மானம் பொதுப்படையாக உள்ளது. இதில் முக்கியமான திருத்தம் செய்ய வேண்டும்.நிதி பகிர்வில் 50 சதவீத மாநிலங்களுக்கு இருக்க வேண்டும் அதை குறிப்பிட்டு தீர்மானத்தை மாற்ற வேண்டும் .மாநில அரசுகளின் வலிமைதான் மத்திய அரசின் வலிமை என பேரறிஞர் அண்ணா கூறினார். நிதி ஆயோக் கூட்டங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கருத்தை வலிமையாக குறிப்பிட்டார் என்றார்.
அதனை தொடர்ந்து தீர்மானத்தை முழு மனதாக அரசின் தனித்தீர்மானத்துக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் , நிதி பகிர்வை அதிகரிக்க அதிமுக வலியுறுத்தியது. நிதி பகிர்வில் தமிழகம் பாதிக்க கூடாது என அவை தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அனைத்து கட்சிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என சபாநாயகர் கூறினார்.
அமைச்சர் மரிய வில்சன் கொண்டுவந்த அரசினர் தனித்திர்மானம் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.