சென்னை,
பழங்குடியின மொழிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துவதற்கு ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு 2026-27-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், பழங்குடியின மொழிகள் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்பட்டு, பழங்குடியின மொழிகளின் தொன்மை மற்றும் தனித்துவத்தைப் பரவலாக்கம் செய்து, மொழிப் பாதுகாப்பில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பை அதிகரித்து, அழிந்து வரும் மொழியியல் மரபுகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஏழு பழங்குடியினர் சமூகங்களை மையமாகக் கொண்டு பழங்குடியின மொழிகள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மூடுல் (Moodle) அடிப்படையிலான கற்றல் மேலாண்மை முறை (LMS) மூலம் "இருளர், பெட்டக் குறும்பர், வொக்ரிபோலி, கோத்தர், காணி, சோளகர், பாலியர் மொழிகள், சமூகம் மற்றும் கலாச்சாரம்" தொடர்பான 16 வார சான்றிதழ் வகுப்புகளை பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் நடத்துவதற்காக ரூ.89,50,000/- (ரூபாய் எண்பத்தொன்பது லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஏழு பழங்குடியின சமூகங்களின் முக்கியமான சமூக மற்றும் கலாசார நிறுவனங்களை அடையாளம் காணுதல், அவர்களின் பேச்சு, சடங்கு நடைமுறைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுக்கு இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ளுதல், பழங்குடி வாய்மொழி செயல்திறனின் தனித்துவமான அம்சங்களையும் கலாச்சார அடையாளத்தில் அதன் பங்கை பகுப்பாய்வு செய்தல், பழங்குடியின மொழிகளின் தலைமுறை வழிப் பரிமாற்றம் தொடர்பான தற்காலிக சவால்களைப் புரிந்துகொள்ளுதல் மூலம் பழங்குடியின மொழிகளின் சமூகப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை மேம்படுத்த இயலும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.