சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 1,850 கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து உடற்தகுதி தேர்வானது நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, உடல் தகுதி தேர்வில் மின் கம்பம் ஏறி இறங்கும் தேர்வுக்கு ஷூ பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெறும் காலில் மின்கம்பம் ஏறி இறங்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது அந்த விதிமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின் கம்பத்தில் ஷூ அணிந்து 30 அடி உயர மின் கம்பத்தை 8 நிமிடங்களில் ஏற வேண்டும் என விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.