திண்டுக்கல்
உள்ளாட்சி தேர்தலில் இருந்து மாற்றம் வர வேண்டும் என்று அண்ணாமலை பரபரப்பாக பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இன்று பேசினார். அவர் பேசும்போது, பக்தர்களுக்கு வசதிகள் செய்வதில் அறநிலையத்துறை ஆர்வம் காட்டவில்லை. கோவிலை முறையாக நிர்வகிப்பதில் அறநிலையத்துறைக்கு மனம் இல்லை. உண்டியல் பணத்தை வாங்க வேண்டும், அரசுக்கு தர வேண்டும் என அறநிலையத்துறை செயல்படுகிறது. வேலியே பயிரை மேய்வதுபோல் இருந்தால் வேலி எதற்கு? என கேட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் வீ தி லீடர்ஸ் போட்டியிடும். உள்ளாட்சி அமைப்புகளின் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் இருந்து மாற்றம் வர வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உள்ளாட்சி தேர்தலில் வி த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் என்று கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, இதே மன்னார்குடிக்கு தற்போதைய எம்.எல்.ஏ.வை வெற்றி பெறச்செய்ய வந்தேன். அதுபோலத்தான் தாராபுரத்திலும் சென்று வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தேன். பாதம் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தேன். தற்போது அந்த எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்ற பின்னர் அந்த கட்சியிலேயே இல்லை. மக்கள் கையில் இருக்கும் மை காய்வதற்குள் வேஷ்டி மாற்றியாகிவிட்டது. இத்தகைய அரசியலை உடைக்க வேண்டும் என்றார்.
இதுபோன்ற ஒரு மோசமான அரசியலுக்குள் நாமும் போகக்கூடாது. இதனால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அடிப்படை பிரச்சனைகள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைவர்களாக உருவாகின்றவர்கள் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை சுத்தப்படுத்துவதில் தொடங்கி, மரம் நடவைத்து அவற்றை பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும், மக்களோடு மக்களாக கீழிறங்கி பணியாற்ற வேண்டும் என்கின்ற ஒற்றை கருத்தில் வீ த லீடர்ஸ் சமூகப்பணி நடைபெற்று வருகின்றது.
இதுபோன்ற ஒரு அரசியல் கட்சி வேண்டும். இதற்காகத்தான் நாம் காத்திருந்தோம் என மக்கள் நினைக்க வேண்டும். 234 தொகுதிகளிலும், உள்ளாட்சிகளிலும் தலைவர்களை உருவாக்க வேண்டும். உள்ளாட்சித்தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு பங்கு பெறும் என்று கூறினார்.
வி த லீடர்ஸ் அமைப்பு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்த நிலையில், தனித்து களமிறங்குமா? அல்லது கூட்டணி அமைத்து களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று அண்ணாமலை கூறினார்.