சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் நாளை முதல் வருகிற 26-ந் தேதி வரை அரக்கோணத்திற்கு பதிலாக திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும். அதே போல, சென்னை கடற்கரையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருத்தணிக்கு பதிலாக திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு செல்லும் ரெயில் திருத்தணிக்கு பதிலாக திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும். அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணத்திற்கு பதிலாக திருவாலாங்காட்டில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும். திருத்தணியில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ரெயில் திருத்தணிக்கு பதிலாக திருவாலாங்காட்டில் இருந்து இரவு 6.50 மணிக்கு புறப்படும்.
அரக்கோணத்தில் இருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் பயணிகள் ரெயில் நாளை முதல் வருகிற 26-ந் தேதி வரை இரவு 7.30 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும். அதே தேதிகளில் திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக திருத்தணியில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.