தமிழக செய்திகள்

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தடுக்கப்படும்-அமைச்சர் விக்னேஷ் பேட்டி

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், நேற்று பழனியில் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்னை திண்டுக்கல் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்துள்ளார். மாவட்ட வளர்ச்சிக்கும், இங்குள்ள குழந்தைகள், அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமாக வளர்வதற்கும் தேவையான என் பங்களிப்பை சிறப்பாகச் செய்வேன். மாவட்ட மக்கள் ஒற்றுமையுடன் வளர்ச்சியைப் பெற நாம் பாடுபடுவோம். இனி திண்டுக்கல் மாவட்டம் வளர்ந்த மாவட்டமாக மாறும்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும். மேலும், முறைப்படுத்தப்பட்டு அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட விலைக்குள் மதுபானம் கொண்டு வரப்படும். நுகர்வோரின் பணம் தனிநபருக்கோ, கட்சிக்கோ போய்ச் சேரக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக உள்ளார். எனது செயல்பாடு மாவட்ட வளர்ச்சியை மையப்படுத்தி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, பழனியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்படும் தனியார் மதுபானக் கூடங்களில் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் வருகை தர உள்ள நிலையில் இன்று (அதாவது நேற்று) அந்த மதுபானக் கூடம் பூட்டப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அனைத்து மதுபானக் கூடங்களிலும் ஆய்வு செய்யப்படும். அதில் முறைகேடு செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.