சென்னை,
மது கடைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக நுகர்வோர், பொதுமக்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளை தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் ஆக.31-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-889-2015 மற்றும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 73977 20230 ஆகியவற்றைத் தொடர்புகொண்டு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமும் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.