தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வழிபாடு

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது.

திருப்பரங்குன்றம்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் தங்கம், பவளம், வைடூரிய ஆபரணங்களும், வண்ண பட்டாடையாலும், பல வண்ண மலர்களாலும் மணக்கோல அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து முருகப்பெருமான், தெய்வானை அம்பாளுடன் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக பசுமலை மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார். அதேவேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்குகளில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர்.

காலை 8 மணிக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் தனது தாய், தந்தையான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை வணங்கி வரவேற்றார்.

இதனையடுத்து மகா தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து முருகப்பெருமான், தெய்வானை அம்பாள், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர். வழிநெடுகிலும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்த திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கோவிலுக்குள் லட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள ஓடுக்கம் மண்டபத்தில் கண்ஊஞ்சல் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ஆறுகால் மண்டபத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை தொடர்ந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் மணமேடையில் எழுந்தருளினார். அக்னி வளர்க்கப்பட்டு திருமண சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

வெண்பட்டு உடுத்தி முருகப் பெருமானும், மஞ்சள் பட்டு உடுத்தி தெய்வானை அம்பாளும் அருள்பாலித்தனர். சிவாச்சாரியார்கள் முருகப்பெருமான் மற்றும் தெய்வானை அம்பாளின் பிரதிநிதிகளாக இருந்து பட்டாடை மற்றும் பூமாலைகளை மாற்றிக் கொண்டனர் இதனையடுத்து பகல் 12.20 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, தெய்வானை அம்பாளுக்கு முருகப்பெருமான் மங்கல நாண் சூட்டி திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடந்தது.

அப்போது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க அட்சதை தூவி வழிபட்டனர். மேலும் பெண்கள் புதிய மங்கலநாண் மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணத்தையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 16 கால் மண்டபம் அருகே பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். பின்னர் சுந்தரேசுவரரும்-மீனாட்சி அம்மனும் விடை பெற்று மதுரைக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா..” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.