மதுரை சர்வேயர் காலனி சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் 
தமிழக செய்திகள்

சதுர்த்தி விழா: மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு விளக்கப்பட்டு உள்ளது.

மதுரை,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது உண்டு. அதன்பின்னர் அந்த சிலைகள் அனைத்தும், கீழமாசிவீதி, விளக்குத்தூண், மொட்டை விநாயகர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்து, பின்னர் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றில் கரைப்பது வழக்கம்.

இதுபோல், புறநகர் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

மதுரை மாநகரில் 350 இடங்களில் சிலைகள்

அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விநாயகர் சிலைகள் வைப்பதற்காக அந்தந்த போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து, மாநகர பகுதிகளில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு மாநகர போலீஸ் அனுமதி அளித்துள்ளது.

அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாநகர் பகுதி முழுவதும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புறநகரில் 400 இடங்கள்

மதுரை புறநகர் பகுதிகளான திருமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான், செக்கானூரணி, ஊமச்சிகுளம், சிலைமான், கருப்பாயூரணி, ஒத்தக்கடை, சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டது. அதன்படி, புறநகரில் சுமார் 400 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் உத்தரவின்பேரில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார், புறநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு விளக்கப்பட்டு உள்ளது.

அதன்படி விநாயகர் சிலைகள் 10 அடிக்கும் குறைவான உயரம் கொண்டவையாக இருக்க வேண்டும். சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கான தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தீத்தடுப்பு பொருட்கள் வைக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT