தமிழக செய்திகள்

ஆம்பூர் அருகே பாலாற்றில் மீண்டும் பொங்கி வழியும் ரசாயன நுரை!

வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், ஆற்றில் பொங்கி வழியும் நுரையைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பாலாற்றில் மீண்டும் வெள்ளை நிறத்தில் ரசாயன நுரை பல அடி உயரத்துக்குப் பொங்கி வழிவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுநீர் ஆற்றில் கலக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மலைபோல் குவியும் வெள்ளை நுரை

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் சில தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுநீரைப் பாலாற்றில் நேரடியாக வெளியேற்றுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு பாலாற்றுத் தரைப்பாலத்தில் வெள்ளை நிற ரசாயன நுரை பல அடி உயரத்துக்கு மலைபோல் குவிந்து காணப்படுகிறது. பாலத்தின் அடியில் பாயும் தண்ணீருடன் சேர்ந்து, வெள்ளைப் பஞ்சுப் பொதிகள் மற்றும் பனிப்பாறைகள் போன்று நுரை குவிந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அச்சம்

தரைப்பாலத்தின் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், ஆற்றில் பொங்கி வழியும் நுரையைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். காற்றில் நுரையின் துகள்கள் பரவுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தோல் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நிலத்தடி நீர் மாசடையும் அபாயம்

பாலாற்றில் கலக்கும் ரசாயனக் கழிவுநீர் ஆற்றுப்படுகை வழியாக நிலத்தடி நீரில் கலக்கக்கூடும் என்பதால், விவசாயக் கிணறுகள் மற்றும் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகள் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், மழைக்காலங்களில் கண்காணிப்பு குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி சில தொழிற்சாலைகள் கழிவுநீரை ஆற்றில் கலப்பதாகவும், இதனால் பாலாற்றின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாலாற்றில் மீண்டும் ரசாயன நுரை பொங்கி வழிவது தொடர்பாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆற்றில் ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் அவற்றுக்கு சீல் வைப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலாற்றுப் பாசன விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT