செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டனர்.
அந்த சமயத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் தனது அறையில் இருந்து வெளியேறிவிட்டார். அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் அறையில் இருந்த ஏ.சி. பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், அங்கு பற்றி எறிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக ஏ.சி. வெடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏ.சி. வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் காட்டாங்குளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.