கே. யுவஸ்ரீ  
தமிழக செய்திகள்

செங்கல்பட்டு: ரெயில் மோதி தடகள மாணவி உயிரிழப்பு

தாம்பரம் மார்க்கத்திலிருந்து வேகமாக வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவு ரெயில் எதிர்பாராத விதமாக யுவஸ்ரீ மீது மோதியது.

செங்கல்பட்டு,

சென்னை புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோவில் அருகே, ஓட்டப் பயிற்சிக்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 16 வயது பள்ளி மாணவி ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சிக்கு சென்றபோது விபரீதம்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பாரதி நகரைச் சேர்ந்தவர் கே. யுவஸ்ரீ (வயது 16). தடகள வீராங்கனையான இவர், வழக்கம்போல நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகேயுள்ள மைதானத்திற்கு ஓட்டப் பயிற்சிக்காக சென்றுள்ளார்.

விரைவு ரெயில் மோதி படுகாயம்

மைதானத்திற்கு செல்வதற்காக அவர் ரெயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாகக் கடக்க முயன்றுள்ளார். அப்போது தாம்பரம் மார்க்கத்திலிருந்து வேகமாக வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவு ரெயில் எதிர்பாராத விதமாக யுவஸ்ரீ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், படுகாயமடைந்த யுவஸ்ரீயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த துயரச் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT