செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இன்வெர்ட்டரில் ஏற்பட்ட மின்கசவு காரணமாக, வீட்டின் வாசல் அருகே வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் ஜெயகுமார், அவரது உறவினர்களான சண்முகம் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சொகுசு கார், ஏ.சி. உள்பட வீட்டில் இருந்த ஏராளமான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் வீட்டில் பற்றி எரிந்த தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.