தமிழக செய்திகள்

செங்கல்பட்டு: போக்குவரத்து சீரமைப்பு பணியின்போது கார் மோதி போலீஸ்காரர் பலியான சோகம்; தீவிர விசாரணை

போலீஸ்காரர்கள் தினேஷ்குமார் (வயது 30), சுரேஷ்குமார் (வயது 54) ஆகியோர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை

செங்கல்பட்டு அருகே போக்குவரத்து சீரமைப்பு பணியின்போது கார் மோதி போலீஸ்காரர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு -திருப்போரூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளை நிற மாருதி கார் ஒன்று செங்கல்பட்டு நோக்கி சென்றது. ஓவர்டன்பேட்டை பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் முறிந்ததால், சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய டிரைவரை சக வாகன ஓட்டிகள் மீட்டபோது, அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

போக்குவரத்து பணி

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரர்கள் தினேஷ்குமார் (வயது 30), சுரேஷ்குமார் (வயது 54) ஆகியோர் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று, போக்குவரத்தை சீரமைத்து கொண்டிருந்த போலீஸ்காரர்கள் மீது மோதியது. இதில் தினேஷ்குமாருக்கு கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. சுரேஷ்குமார் லேசான காயமடைந்தார். இருவரையும் மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

பழைய குற்றவாளி

இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், போலீசார் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர், அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த தீனா (வயது 33) என்பது தெரியவந்தது. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும், மறைமலைநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற தீனாவை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT