செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கும் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது.
பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் அரசு சார்பில் உரிமம் வழங்கப்பட்டு உறுப்பினர்களாக உள்ள இருளர்கள் ஆண்டுதோறும் விஷ பாம்புகளை பிடித்து இந்த பாம்பு பண்ணைக்கு வழங்கி வருகின்றனர். இங்கு கொண்டு வரப்படும் பாம்புகள் மண் பானைகளில் பராமரிக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை தமிழக அரசின் அனுமதியுடன் மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதாலும், பாம்புகளின் இனவிருத்தி அதிகரிக்க வேண்டும் என்பதாலும் வடநெம்மேலி பாம்பு பண்ணை வனத்துறை உத்தரவின்பேரில் 5 மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.