சென்னை,
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய ஏ.சி. மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்திடவும், பேருந்துப் பணிமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவையாகும்.
தமிழ்நாடு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பை நவீனமயமாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்திடும் விதமாகவும் நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு மொத்தச் செலவு ஒப்பந்த (Gross Cost Contract) முறையின் கீழ், 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்திடவும், இப்பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பேருந்துப் பணிமனைகளில் ஏற்படுத்துவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை நவீனமயமாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.