வீடியோ வெளியிட்ட பெண் 
தமிழக செய்திகள்

சென்னை: ஓடும் பேருந்தில் நூதன முறையில் 2 செல்போன்கள் திருட்டு - பெண் பயணி வெளியிட்ட வீடியோ

எம்.டி.சி பேருந்தில் பயணிக்கும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

சென்னை

ஓடும் பேருந்தில் பெண் பயணியின் கைப்பையை கிழித்து 2 செல்போன்களை நூதன முறையில் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். பறிகொடுத்த பெண் பயணி வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியது,

நான் கேகே நகர் இஎஸ்ஐ என்ற இடத்தில் இருந்து எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகம் வரை (17B)பேருந்தில் பயணம் செய்தேன். என்னிடம், வயதான பாட்டி ஒருவர் பேச்சுகொடுத்தார். அவர் என்னிடம் செல்போனை வாங்கி பேசினார், கடலை வேண்டுமா?, தண்ணி இருக்கிறதா?, பவர் பேங்க் இருக்கிறதா?, எங்கே இறங்குவீர்கள்? என்று கேள்வி கேட்டார். எப்பொழுதும் நான் பாடல் கேட்டுக்கொண்டு தான் பயணம் செய்வேன் . அந்த பாட்டிக்கு 60 வயதிற்கு மேல் இருக்கும். அவர் மனது விட்டு பேசுவதாக தெரிந்ததால் நானும் பேசினேன்.

எழும்பூர் நிறுத்தம்

எழும்பூர் குழந்தை மருத்துவமனை நிறுத்தத்திற்கு அருகில் வரும்போது கூட என்னிடம் செல்போன் இருந்தது. அதற்கு அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்க வேண்டும். இந்த இடைப்பட்ட இடத்தில் தான் என் கண்களில் ஏதோ ஒன்று விழுந்தது. நான் கண்ணை மூடிக்கொண்டு என் தோழியின் கையை பிடித்து கொண்டேன். குறைந்தது 30 முதல் 40 விநாடிகளுக்குள் இந்த திருட்டு அரங்கேறியுள்ளது.

செல்போன் பறிப்பு

அந்த பாட்டி டபில்யூ.சி.சி என்ற இடத்தில் இறங்கினார். எனக்கு தெரிந்து அந்த பாட்டி இறங்கும்போது என் பையை கிழித்துவிட்டு இறங்கியுள்ளார். பின்பு நான் இறங்குவதற்குள் அவருடன் வந்த நபர்கள் தான் செல்போனை திருடியிருப்பார்கள். நான் படத்தில் இந்த மாதிரி சம்பவம் பார்த்துள்ளேன், முதல் முறையாக எனக்கு நடந்தது. என்னிடம் இருந்து மொத்தம் ரூ.60,000 மதிப்புள்ள 2 செல்போன்கள் திருடு போய்விட்டது. தயவு செய்து ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக எம்.டி.சி பேருந்தில் பயணிக்கும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு தன் வேதனையை தெரிவித்துள்ளார்.