காவல் நிலையம் 
தமிழக செய்திகள்

சென்னை: கொடுங்கையூரில் கொசு மருந்து தெளித்ததால் 3 பெண்கள் மயக்கம்

மாநகராட்சி ஊழியர்கள் யாரும் அங்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கொடுங்கையூரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 பெண்கள் திடீரென மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 பெண்கள் திடீர் மயக்கம்

சென்னை கொடுங்கையூரில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் கொசு மருந்து தெளித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சுமதி மற்றும் சுமித்ரா ஆகிய 2 பேருக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு புறநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகராட்சி விளக்கத்தால் அதிர்ச்சி

இந்தச் சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் யாரும் அங்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

இதன் மூலம், மாநகராட்சி ஊழியர்கள் போல நடித்து மர்ம நபர்கள் மயக்க மருந்து கலந்த புகையைத் தெளித்து, நகை அல்லது பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT