சென்னை,
சென்னை கடற்கரை - தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில் தினமும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும், 2.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 40 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20-ந் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் எழும்பூரில் வழக்கமாக நின்று செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடையில் இனி ரெயில்கள் இயக்கப்படாது. அதற்கு பதிலாக 5 மற்றும் 6 நடைமேடைகளில் இனி புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்து காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த மின்சார ரெயில்கள் ரத்து காரணமாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிகிறது.