தமிழக செய்திகள்

சென்னை: மழை வெள்ளத்தை சமாளிக்க 650 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைப்பு..!

இதில் முதற்கட்டமாக 45 இடங்களில் 100 எச்.பி. உயர்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் தேங்கும் இடங்களில் 100 எச்.பி. உயர்திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மூலம் இயங்கும் 500 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அதிகப்படியான வெள்ளப்பாதிப்புகள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்ட 45 இடங்களில் 100 எச்.பி. உயர்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முக்கிய பணிகளான கால்வாய்கள் தூர்வாருதல், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றுதல், சாலை பராமரிப்பு, உணவுக்கூடம் மற்றும் தற்காலிக முகாம்கள் தயார் செய்தல், மோட்டர் பம்புகள் தயார்நிலையில் வைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வார்டு வாரியாக மழைக்காலங்களில் பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து 2 முறை ஒத்திகை நடத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

670 மோட்டார் பம்புகள் தயார்

2026 வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக கனமழை காரணமாக ஏற்படும் போது வெள்ளப் பாதிப்பினை சீர் செய்யும் பணிக்காக, 150 எண்ணிக்கையிலான 100 எச்.பி. உயர்திறன் கொண்ட மோட்டார் பம்புகள், 500 எண்ணிக்கையிலான டிராக்டர் மூலம் இயங்கும் மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் பல்வேறு திறன்கள் கொண்ட 670 மின் மற்றும் டீசல் மோட்டார் பம்புகளும் தயார்நிலையில் உள்ளன.

இதில் முதற்கட்டமாக அதிகப்படியான வெள்ளப்பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் என கண்டறியப்பட்ட 45 இடங்களில் 100 எச்.பி. உயர்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டு, வெள்ள நீரினை வெளியேற்ற தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 15.10.2026க்குள் 70 சதவீதம் மோட்டார் பம்புகள் நிறுவப்படும். பருவமழைக்கு முன்னதாக அனைத்து மோட்டார் பம்புகளும் தயார்நிலையில் வைக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT