சென்னை,
தரவரிசையில் சென்னை விமான நிலையங்கள் பின் தங்கிய நிலையில், தற்போது உள்ள 5-வது இடத்தையும் கொல்கத்தாவிடம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-வது பரபரப்பான விமான நிலையமாக இருந்த சென்னை, தற்போது பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு பின்னால் தள்ளப்பட்டுள்ளது. இப்போது உள்ள 5-வது இடத்தையும் கொல்கத்தாவிடம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லாமை. ஓடுபாதை (ரன்வே) நெரிசல் மற்றும் விமான நிறுவனங்கள் சேவைகளை குறைத்து வருவது போன்ற காரணங்களால் சென்னை விமான நிலையத்தின் தரவரிசை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கடந்த மே மாதம் புள்ளிவிவரங்களின்படி, கொல்கத்தா விமான நிலையம் 18.70 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. சென்னை விமான நிலையம் 19.04 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 34 ஆயிரம் பயணிகள்தான். விமான இயக்கங்களிலும் கொல்கத்தா வேகமாக முன்னேறி வருகிறது. மே மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் 13,025 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் 12,080 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. வித்தியாசம் வெறும் 945 விமானங்களாக மட்டுமே உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை, மே மாதத்தில் மீண்டும் 5-வது இடத்தை பிடித்தாலும், அதன் முன்னிலை மிகவும் குறைவாகவே உள்ளது. சென்னையின் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்த 14.85 லட்சத்தில் இருந்து இந்த ஆண்டு 13.93 லட்சமாக, 6.2 சதவீதம் குறைந்துள்ளது. மாறாக, கொல்கத்தாவில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 15.96 லட்சத்தில் இருந்து 16.59 லட்சமாக, 4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐதராபாத் விமான நிலையம் சென்னையை விட மேலும் முன்னிலை பெற்றுள்ளது. மே மாதத்தில் ஐதராபாத் 25.49 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. சென்னை 19.04 லட்சம் பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது. விமான இயக்கங்களிலும் ஐதராபாத் 17,306 விமானங்களை கையாண்டுள்ளது. சென்னை 13,025 விமானங்களை மட்டுமே கையாண்டுள்ளது.
ஜூன் மாதத்தில் நாட்டின் பரபரப்பான 10 விமான நிலையங்களில் 7 விமான நிலையங்களில் புறப்படும் விமானங்களின் இருக்கை திறன் குறைந்துள்ளது. அதில் ஐதராபாத்தில் 18.5 சதவீதமும், சென்னையில் 16.6 சதவீதமும், கொல்கத்தாவில் 11 சதவீதமும் சரிவு பதிவாகியுள்ளது. இருப்பினும், சென்னை விமான நிலைய அதிகாரிகள். தற்போது நடைபெற்று வரும் டாக்ஸிவே மற்றும் ஒருங்கிணைந்த முனைய பணிகள் முடிவடைந்தால் விமான நிலையத்தின் செயல்திறன் கணிசமாக மேம்படும் என்று தெரிவித்துள்ளனர்.