சென்னை விமான நிலையம் 
தமிழக செய்திகள்

உலகத் தரத்திற்கு மாறும் சென்னை விமான நிலையம்: தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரம்

டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நாட்டின் முக்கிய பெருநகர விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், பராமரிப்பு போன்ற பணிகளை பொது-தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

தனியார் வசம் செல்லும் சென்னை விமான நிலையம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் அடுத்தகட்ட மேம்பாட்டுப் பணிகளை பொது-தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நாட்டின் முக்கிய பெருநகர விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்களால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

தமிழக முதலமைச்சரின் கடிதம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டின் தற்போதைய தொழில் முதலீட்டு இலக்குகளுக்கு ஏற்ப, சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகள் சென்னை விமான நிலையத்தில் இல்லை என்றும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு (ஏஏஐ) மாற்றாகப் புதிய தகுதியான ஆபரேட்டரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது.

விமான நிலையத்தின் சூழல்

நிதி ஆண்டு 2025-26 ல் சென்னை விமான நிலையம் சுமார் 2.30 கோடி (23.01 மில்லியன்) பயணிகளைக் கையாண்டுள்ளது. உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் புதிய முனையங்கள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளைப் பராமரிக்கும் வகையில் இதன் திறன் உயரவுள்ளது.

தனியாரிடம் செல்லும் பொறுப்புகள்

இந்த திட்டத்தின்படி, விமான நிலையத்தின் தினசரி செயல்பாடுகள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற மேலாண்மைப் பொறுப்புகள் மட்டுமே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரிவுகள்

விமான நிலைய நிர்வாகம் தனியாரிடம் சென்றாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளைக் கண்காணிக்கும் மிக முக்கியமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணிகள் எப்போதுமே மத்திய அரசின் விமான நிலையங்கள் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தாவிலும் மாற்றம்

மத்திய அரசின் இந்த புதிய தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலையத்துடன் சேர்த்து கொல்கத்தா விமான நிலையத்தையும் இதே பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் தனியார் வசம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT