சென்னை,
சென்னை மீனம்பாக்கத்தில் மரத்தில் தூக்குப்போட்டு ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆலந்தூர் மடுவின்கரை 4-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 29). ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இவர், பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து வலி மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாய் சொந்த ஊருக்கு சென்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்த அஜித்குமார், மீனம்பாக்கம்-திரிசூலம் துப்பாக்கி சுடும் தளத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.