சென்னை,
பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. தி.மு.க.-த.வெ.க. அதிமுக, பாமக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு, தேர்தல் வாக்குறுதியை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் (பரந்தூர் விமானநிலையம்) அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அண்ணாமலை, அன்புமணி ராமதாசும் பரந்தூர் விமான நிலையம் அமையவில்லை என்றால் வேறு இடத்தை உடனடியாக தேர்வு செய்த அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பான விவாதம் இன்று சட்டசபையில் நடந்தது. அப்போது பரந்தூர் விமான நிலையம் எதனால் கைவிடப்பட்டது? இதுவரை கையகப்படுத்திய நிலத்தை அரசு என்ன செய்யப்போகிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத்தை எதற்காக கொண்டுவந்தோம் என்று விளக்கம் அளித்துள்ளோம். பல இடங்களை ஆய்வு செய்த பிறகும் ஏர்போர்ட் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்த பாதிப்புகள் அடிப்படையில் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இன்னொரு இடத்தை தேர்வு செய்வதாக கூறியிருக்கிறீர்கள். அங்கும் நீங்கள் இதே சூழலை எதிர்கொள்வீர்கள் என்று கூறினார்
அதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ‘சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகளை திமுக கிடப்பில் போட்டது ஏன்? பரந்தூர் குறித்த உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை.
பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.பரந்தூர் விமான நிலையத்தால் 1500 நீர்நிலைகள் பாதிக்கப்படும். பரந்தூரில் நீர்நிலைகளை அழிப்பது சென்னைக்கு வெள்ள அபத்தை உருவாக்குவதோடு, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் அதிகரிக்கும்.
விளை நிலத்தில் விமான நிலையம் அமைத்தால் கொச்சி பாதிக்கப்படுகிறது. பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.
1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு. பரந்தூர் நிலங்கள் முப்போகம் நெல் விளையக்கூடிய வளமான விவசாய பூமியாகும். இப்பகுதிகளில் உள்ள இயற்கை நீர்நிலைகள் மழைநீரை சேமித்து ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
மக்களின் தொடர் சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் ஈரநில பாதுகாப்பு கோரிக்கைகளை தொடர்ந்து மாற்று தொழில் திட்டங்கள் மற்றும் மாற்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மாற்று தொழில் திட்டங்களை பரிசீலிக்க உள்ளோம்.
பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும் என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,‘ 1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது’ என்றார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.
விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
விமான நிலையம் அமைப்பது மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது. நிலம் கையகப்படுத்துவது மட்டும் தான் மாநில அரசின் பணி. மாநில அரசாங்கத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு மூன்று அமைச்சர்கள் நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளை அழைத்து பேசினோம். 13 கிராமங்களில் 11 கிராமங்கள் ஒத்துக் கொண்டன. ஏகனாபுரம், பரந்தூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்து திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
சட்டத்தில் அதற்கு இடமில்லை. எந்த திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்டதோ, அந்த திட்டத்திற்கு தான் பயன்படுத்த வேண்டும், இல்லை என்றால், விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் கூறினார்.
குறிப்பிட்ட திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலம், குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்த முடியாத நிலையில், மற்ற திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என
அமைச்சர் கீர்த்தனா பதில் அளித்ஹ்டார்.