தமிழக செய்திகள்

சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை; 14 கி.மீ. துார பணிக்கு ரூ.614 கோடியில் டெண்டர்

பல்வேறு குறைபாடுகள் ஆகியவற்றால் திட்டப்பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை,

சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 7 மணி நேரமாகிறது.

அதிவிரைவுச் சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் பயண நேரம் மூன்று மணி நேரமாகக் குறையும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 263 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த அதிவிரைவுச் சாலைக்கான பணிகள் ரூ.18,000 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் தொடங்கின.

இதுவரை 230 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பணிகள் முடிவடைந்துள்ளன. 263 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த விரைவு சாலையில், கர்நாடக எல்லைக்கு உட்பட்ட 71 கிலோ மீட்டர் நீளமுள்ள ஹோஸ்கோட்டே-பெத்தமங்களா பகுதி வரையிலான பணிகள் நூறு விழுக்காடு நிறைவடைந்து, போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பகுதிகளிலும் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் 90 விழுக்காட்டுப் பணிகள் முடிந்துள்ளன.

தமிழகத்தில் 106 கி.மீ., துாரத்தில், இதுவரை 92 கி.மீ. பணிகள் முடிந்துள்ளன. இந்த விரைவு சாலைத் திட்டப்பணிகள் முதலில் 2024-ம் ஆண்டு மார்ச்சில் முடிக்கத் திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கவில்லை. இதனால், திட்ட மதிப்பீடு தொகை 10,507 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் மீதமுள்ள 14 கி.மீ., துாரத்துக்கான பணிகள் 614 கோடி ரூபாயில் மேற்கொள்ள உள்ளது. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை திட்டத்தில், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. தமிழக பகுதிகளில், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், மின்சாரம், குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை இடமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒப்பந்ததாரர்களின் செயல்பாட்டில் குறைபாடுகள் ஆகியவற்றால் திட்டப்பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்த திட்டத்தில் பெரும் பகுதியாக, அரக்கோணம் - காஞ்சிபுரம் இடையே, 25 கி.மீ., துாரம் முடிப்பதில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது இதுவும் தீர்வு காணப்பட்டு, முதல்கட்டமாக, 11 கி.மீ., துாரம் பணிகள் முடிந்து விட்டோம். அடுத்தகட்டமாக 14 கி.மீ., துாரத்துக்கு ரூ.614 கோடியில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் வெளியிட்டுள்ளோம். விரைவில் ஒப்பந்ததாரரை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT