ஆலந்தூர்
சென்னை வேளச்சேரியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் உடனடியாக செயல்பட்டு தப்பிய வாலிபர்கள்
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரை சேர்ந்தவர் கவின் (வயது 26). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களை காரில் ஏற்றிக்கொண்டு, ராஜலட்சுமி நகர் 3-வது மெயின் சாலை வழியாக கங்கை நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதை கவனித்த கவின், உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து, காரில் இருந்த தனது நண்பர்களையும் பாதுகாப்பாக இறங்க செய்த சிறிது நேரத்திலேயே கார் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து வேளச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.