சென்னை,
சென்னையில் எழும்பூர், சென்டிரல் உள்பட அனைத்து முக்கியமான ரெயில் நிலையங்களிலும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ரெயில்களில் படிகளில் தொங்கி பயணிப்பவர்கள், தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதுகுறித்து ரெயில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், எழும்பூர் ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளங்களை கடக்க முயன்ற பயணிகள் மீது ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் எழும்பூர் ரெயில் நிலைய பகுதிகளில் தண்டவாளங்கள் கடக்க முயன்ற 384 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபராதமாக ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 450 வசூலிக் கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். ரெயில்வே தண்டவாளங்களை கடப்பது குற்றமாகும். எனவே, பயணிகள் ரெயில் நிலையங்களில் ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக செல்ல வேண்டும் என ரெயில்வே பாதுகாப்பு படையினர் வலியுறுத்தியுள்ளனர்.