சென்னை,
சென்டிரல்-அரக்கோணம் இடையிலான ஏ.சி. மின்சார ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்ட ஏ.சி.மின்சார ரெயில் கடந்த ஆண்டு தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேயின் முதல் ஏ.சி. மின்சார ரெயிலான இந்த ரெயில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் தனது சேவையை தொடங்கியது.
இந்த நிலையில், 2-வது ஏ.சி. மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரெயில் சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்குவதற்கான ஒப்புதலை ரெயில்வே வாரியம் வழங்கியது. இதையடுத்து சென்டிரல் - அரக்கோணம் இடையே அக்டோபர் 23-ந் தேதி முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.
அதன்படி சென்டிரல் அரக்கோணம் இடையிலான ஏ.சி. மின்சார ரெயில் சேவை நேற்று தொடங்கியது. காலை 6.30 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு 7.45 மணிக்கு அரக்கோணம் சென்றடைந்தது. முன்னதாக இந்த ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தபோது பயணிகள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காலை 8 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சென்டிரல், சென்டிர லில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு ஆவடி, மாலை 5.25 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு 6.10 மணிக்கு சென்டிரல் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சென்றடைந்தது. கடைசி சேவை இரவு 8.10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 9.10 மணிக்கு ஆவடி வரை மட்டுமே இயக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று தெற்கு ரெயில்வேயின் உயர் அதிகாரிகள், என்ஜினீயர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ரெயிலில் பயணம் செய்து கண்காணித்தனர். நேற்று சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு ரெயிலில் பயணிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. வரும் திங்கட்கி ழமை முதல் டிக்கெட் கவுண்ட்டர்களில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கென தனியாக டிக்கெட் எடுக் கும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தூரத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.35-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.230 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் ஏ.சி.மின்சார ரெயில் சேவை இயங்கும் என்பதால் இன்றும், நாளையும் இந்த ரெயில் இயக்கப்படாது. 2 மாத காலத்திற்கு அதாவது டிசம்பர் 24-ந்தேதி வரையில் சோதனை அடிப்படையில் மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும். பயணிகளின் வரவேற்பை பொருத்து நீட்டிப்பு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.