சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்டிரல் - சாலிமார் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் இந்த மாதம் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 4.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22363), 2 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாகவும், 24-ந்தேதி 2 மணி நேரம் தாமதமாகவும் கோவை வந்தடையும். ஆந்திர மாநிலம் நரசபூரில் இருந்து வருகிற 6,13 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06020), 50 நிமிடம் தாமதமாகவும், வருகிற 20, 27 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாகவும் தூத்துக்குடி வந்தடையும்.
மேற்கு வங்க மாநிலம் சாலிமாரில் இருந்து வருகிற 6,13 ஆகிய தேதிகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22825), 50 நிமிடம் தாமதமாகவும், வருகிற 20, 27 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாகவும் சென்னை சென்டிரல் வந்தடையும். மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் இருந்து வருகிற 8-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22603), 50 நிமிடம் தாமதமாகவும், வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாகவும் விழுப்புரம் வந்தடையும். மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து வருகிற 9-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22612), 50 நிமிடம் தாமதமாகவும், வருகிற 16, 23 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாகவும் சென்னை சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.