தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி அறிவிப்பு: இன்று முதல் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இணையதளப் பதிவு தொடக்கம்

மக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும்.

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியாக இன்று 17.07.2026 முதல் 31.07.2026 வரை பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக https://se.census.gov.in என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து, கொள்ளலாம்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட பணிகள் தொடங்குகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையை கணக்கிடும் பணி மட்டும் இன்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இது அமைகிறது.

தகவல்கள்

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்து திட்டங்களையும் சரியாக திட்டமிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தகவல்கள் தான் அடிப்படையாக அமைகின்றது. அதனால், ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியம்.

வீடுகள் கணக்கெடுப்பு

இந்தியாவில் முதல்முறையாக, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும். அதற்கு முன்பாக, இன்று (17.07.2026 ) முதல் 31.07.2026 வரை, முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இணையதள பதிவு

இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை தாங்களே இணையம் வழியாக https://se.census.gov.in என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.

நாளைய வளர்ச்சி

எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுய கணக்கெடுப்பிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

மக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எந்த தயக்கமும் இல்லாமல், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கலாம். மக்களின் நலனே அரசின் முதன்மையான நோக்கம். இன்று எடுக்கும் சரியான தகவல்கள் தான் நாளைய வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக அமையும். மக்கள் நலனுக்காக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம்.

மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.