சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியினை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் சர்வதேச தரத்தில் நீலக்கொடி கடற்கரைப் பகுதி-1 மற்றும் 2 பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் நீலக்கொடி கடற்கரைத் திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ஒவ்வொன்றிலும் 20 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மூங்கிலால் ஆன 20 நிழற்குடைகள், 40 சாய்வு நாற்காலிகள், 12 அமரும் நாற்காலிகள், 4 கண்காணிப்புக் கோபுரங்கள், 24 குப்பைத் தொட்டிகள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை மற்றும் தன்படம் எடுக்கும் 2 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 12 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள், 4 இடங்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தென்னை மரங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு மற்றும் முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கழிப்பறை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இன்று நேரில் பார்வையிட்டு, கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக மெரினா கடற்கரைப் பகுதியை சுற்றிப்பார்க்க வருகை தருவதால் குப்பைகள் சேகரிக்கும் பணியினை நாள்தோறும் தொய்வின்றி சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும், இதேபோன்று பொதுமக்கள் பயன்படுத்தும் இலவசக் கழிப்பிடத்தினை நாள்தோறும் தூய்மையாகப் பராமரித்திடவும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், விவேகானந்தர் இல்லம் எதிரில் முடிவுறும் நிலையில் உள்ள நீலக்கொடி கடற்கரை திட்டம்-3 பணிகள், கலங்கரை விளக்கம் பின்பகுதியில் நடைபெற்று வரும் நீலக்கொடி கடற்கரைத் திட்டம்-4 பணிகள், அண்ணா சதுக்கம் அருகில் தொடங்கப்பட்டுள்ள நீலக்கொடி கடற்கரைத் திட்டம்-5 ஆகிய பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, ஆணையாளர் அவர்கள் சென்னை மெரினா நீச்சல் குளத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இக்குளமானது பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நீச்சல் குளமானது காலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்பட்டு வருகிறது. தற்பொழுது கோடைக் காலம் என்பதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இக்குளத்தினைப் பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர். இக்குளத்தின் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள், நீச்சல் குளத்தில் தண்ணீர் பராமரிப்பு, நீச்சல் குளம் பராமரிப்பு, கழிவறை பராமரிப்பு, தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், உடை மாற்றுதல் அறை ஆகியவற்றை பார்வையிட்டு நீச்சல் குளத்தினை தினந்தோறும் தூய்மையாகப் பராமரித்திட மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு.பானுகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.