சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அடிசல் உணவகத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சமையல் கூடத்தினைப் பார்வையிட்டு சமைக்கும் இடத்தினைத் தூய்மையாகப் பராமரித்திடவும், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், சுவையான மற்றும் தரமான உணவினை வழங்கிடவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த அடிசல் உணவகத்தின் ஒரு நுழைவாயில் ரிப்பன் கட்டட வளாகத்தில் இருப்பதால் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த உணவகத்தினைப் பயன்படுத்திக் கொள்வர், மற்றொரு நுழைவாயில் பெரியமேடு, சைடன்ஹாம்ஸ் சாலைப் பகுதியில் உள்ளதால் பொதுமக்களும் இந்த உணவகத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உணவருந்தும் கூடத்தினைப் பார்வையிட்டு, அங்கு போதிய நாற்காளிகள், மேஜைகள் மற்றும் குடிநீர் வசதி, மின் வசதி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், அங்கு பயன்படுத்தக் கூடிய உடற்பயிற்சி உபகரணங்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள் குறித்து உடற்பயிற்சி பயிற்சியாளரிடம் கேட்டறிந்தார். கூடுதலாக தேவைப்படும் உடற்பயிற்சிக் உபகரணங்களை வழங்கிடவும், உடற்பயிற்சிக் கூடத்தினை சிறப்பாக பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகை தாழ்தளத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து அலுவலகங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மாநகராட்சி ஆணையாளர், ரிப்பன் கட்டிட வளாகத்தில் ரூபாய் 74.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய மன்றக் கூடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.