தமிழக செய்திகள்

வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு

பொதுமக்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன.

இந்த திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிற்கே மீண்டும் மாற்றப்படும். மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.