சென்னை,
சென்னையில் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து, 29 வயது பெண்ணை ஏமாற்றி 2வது காதல் திருமணம் செய்ததோடு, ரூ.16 லட்சம் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த சென்னை மாநகராட்சி ஊழியரை பெரியமேடு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஊழியரான வசந்தகுமார் (வயது 38) என்பவருக்கும், ஆவடி பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்த வசந்தகுமார், அந்த பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடந்த 2023-ம் ஆண்டு ரகசியமாக 2வது திருமணம் செய்துகொண்டு அயனாவரத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதனிடையே, குடும்பத் தேவை எனக் கூறி அந்த பெண்ணிடமிருந்து ரூ.16 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகைகளை வசந்தகுமார் வாங்கியுள்ளார். நாட்கள் செல்ல செல்ல வசந்தகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது 2வது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், பணத்தையும் நகையையும் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், வசந்தகுமார் தர மறுக்கவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆவடி காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த நிலையில், கடந்த 18-ந்தேதி பணத்தை திருப்பி தருவதாகக் கூறி, ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு வருமாறு அந்த பெண்ணை வசந்தகுமார் வரவழைத்துள்ளார். அங்கு சென்ற அந்த பெண்ணிடம் வசந்தகுமாரும், அவரது முதல் மனைவியும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே, இருவரும் சேர்ந்து பொதுவெளியில் அந்த பெண்ணை அவதூறாகப் பேசி, சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
காயமடைந்த அந்த பெண் இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை மாநகராட்சி ஊழியர் வசந்தகுமாரை அதிரடியாக கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள வசந்தகுமாரின் முதல் மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.