சென்னை,
சென்னை மாநகராட்சியில் உள்ள உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு உடல், மன என முழுநலன் சார்ந்த பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
அம்மா மாளிகை
இன்று சென்னை மாநகராட்சியில் உள்ள உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்கு உடல் நலன், மன நலன் என முழுநலன் சார்ந்த பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் கிரடாய் மற்றும் துருதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தியது. இப்பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தொடங்கி வைத்து பேசினார்.
இப்பயிற்சியினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் ஒரு கோடி மக்களின் அடிப்படை தேவைகளுக்கான சேவைகளை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. இத்திட்டப் பணிகளை மக்களிடம் கொண்டு சென்று சிறந்த சேவையினை வழங்கிடும் வகையில், மாநகராட்சியின் பொறியாளர்கள் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை தங்களது பொறுப்பை உணர்ந்து பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்கள் தங்களது உடல் நலனையும், மன நலனையும் ஒரு சேர பேணி பாதுகாத்து கொள்வது அத்தியாவசியமாகும். தங்களுக்கான பணிகள் காரணமாக ஏற்படும் மன இறுக்கத்தையும், சோர்வினையும் தவிர்த்து தங்களது உடல், மனம் சார்ந்த நலன்களில் தனிக்கவனம் செலுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் கிரடாய் மற்றும் துருதி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து முழுநலன் சார்ந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியாளர்கள் தங்களது பணிகளுக்கிடையில் உடல், மனம் ஆகியவற்றில் மேம்பட்ட கவனம் செலுத்துவதற்கும், விழிப்புணர்வு பெறுவதற்கும் இப்பயிற்சி மிகவும் உதவிகரமாக அமைந்திடும் என்று பேசினார்.
இப்பயிற்சியில், இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், சென்னை கிரடாய் நிர்வாகிகள்மெகுல் எச். தோஷி, பிரகாஷ் செல்லா, வர்கீஸ் ஜான், ஆஷா மரினா, துருதி அறக்கட்டளை நிர்வாகிகள் சுரேஷ் அருணாசலம், ராம்ஜி வெங்கடாச்சாரி, ஏழுமலை சிவகுமார், டாக்டர் சங்கீதா சண்முகம், ஜெயா வெங்கடேஷ், பயிற்சி வழங்குநர்கள் டாக்டர் சங்கீதா சந்தோஷ், டாக்டர் திவ்யா பிரபா, மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.