சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய கடந்த 15.10.2026 முதல் இன்று (10.11.2026) வரை 2,430 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 81,199 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் 3,703 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்களின் நல்வாழ்விற்காக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் 200 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 16 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனை என 360 மருத்துவமனைகள், 10 டயாலிசிஸ் மையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தவும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தவும் தினந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் குடிசைப் பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கிய கடந்த 15.10.2026 முதல் 09.11.2026 வரை 2,359 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 78,996 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று (10.11.2026) 71 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2,203 நபர்கள் என மொத்தம் 2,430 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 81,199 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த மாதம் பிரசவத் தேதி (EDD) நெருங்கும் 237 கர்ப்பிணித் தாய்மார்களிடமும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளப்பட்டு, ஏதேனும் அவசர உதவி தேவைப்படுகிறதா என்பது குறித்துக் கேட்டறியப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மாநகராட்சிப் பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் வீடுகள் தோறும் களப்பணியாளர்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேங்காய் ஓடு, கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றுதல், வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுப்புழு உருவாகியுள்ளதா எனக் கண்டறிந்து கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், வீடுகள்தோறும் காய்ச்சல் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்து, அவ்விவரங்களைப் பதிவு செய்தல், அவ்விடத்தில் தீவிரத் தூய்மைப் பணி மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், தெருக்கள் மற்றும் வீடுகளில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,703 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளரும் நாளொன்றுக்கு 80 முதல் 100 வீடுகளை களஆய்வு மேற்கொள்கின்றனர். இதில் 372 இடங்கள் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாக (hotspots) கண்டறியப்பட்டு, அவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
குடிநீரில் எஞ்சிய குளோரின் (Residual Chlorine) அளவைக் கண்டறிய 09.11.2026 அன்று 515 நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 42 நீரேற்று நிலையங்கள் (Pumping Stations), 340 பொது நீர் வழங்கும் இடங்கள் (Public Foundations), 52 மெட்ரோ லாரிகள், 71 மெட்ரோ தொட்டிகள் மற்றும் 10 தனியார் லாரிகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் அடங்கும். இவற்றில், குளோரினேற்றம் செய்யப்படாத மாதிரிகள் எதுவும் இல்லை.
தொடர்ச்சியாக, இன்று (10.11.2026) 1,166 நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 52 நீரேற்று நிலையங்கள் (Pumping Stations), 807 பொது நீர் வழங்கும் இடங்கள் (Public Foundations), சென்னை குடிநீர் வாரியத்தின் 139 லாரிகள் மற்றும் 130 தொட்டிகள் மற்றும் 38 தனியார் லாரிகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் அடங்கும். இவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிருமி நீக்கம் செய்வதற்காக 53,405 கிலோ பிளீச்சிங் பவுடர் கையிருப்பில் உள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழை காலத்தைச் சமாளிப்பதற்காக கூடுதலாக 150 டன் பிளீச்சிங் பவுடர் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.