கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 1,00,378 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை மாநகராட்சியில் அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம்கள் மூலம் 11.08.2026 முதல் 25.09.2026 வரை 1,00,378 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும், அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) 11.08.2026 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, 1 முதல் 15 மண்டலங்களிலும் வார்டு வாரியாக தெருநாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்கே சென்று நாய் பிடிக்கும் பணியாளர்கள் மூலம் வலைகளைக் கொண்டு நாய்களைப் பிடித்து கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் (Vegetable dye) தெளித்து அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒவ்வொரு நாயின் புகைப்படமும் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழுவும் தோராயமாக நாள் ஒன்றிற்கு சுமார் 100 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு தோராயமாக 3,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தலா 10 குழுக்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் 3 மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமின் மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் 12,313 தெருநாய்களுக்கும், மணலி மண்டலத்தில் 7,200 தெருநாய்களுக்கும், மாதவரம் மண்டலத்தில் 15,038 தெருநாய்களுக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12,477 தெருநாய்களுக்கும், ராயபுரம் மண்டலத்தில் 8,598 தெருநாய்களுக்கும், அம்பத்தூர் மண்டலத்தில் 21,844 தெருநாய்களுக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 11,895 தெருநாய்களுக்கும், ஆலந்தூர் மண்டலத்தில் 4,343 தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது, கோடம்பாக்கம், திரு.வி.க நகர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் இம்முகாம் நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 3,290 தெருநாய்களுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 2,609 தெருநாய்களுக்கும் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் 771 தெருநாய்களுக்கும், இதுவரை வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் மூலம் 11.08.2026 முதல் 25.09.2026 வரை பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1,00,378 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாம் 11.08.2026 அன்று தொடங்கப்பட்டு இதுவரை 41 வேலை நாட்கள் நிறைவுற்றுள்ளது. மேலும் 34 வேலை நாட்களுக்குள் மண்டலங்கள் 9, 11, 13, மற்றும் 15 ஆகியவற்றில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் “வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கு பொதுமக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் நல்ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT