சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆசாத் அறக்கட்டளை இணைந்து சென்னையில் பெண்களின் போக்குவரத்து அணுகல், பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் மற்றும் பெண்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்குவதில் அனுபவம் கொண்ட ஆசாத் அறக்கட்டளையும் இணைந்து சென்னையில் பெண்களின் போக்குவரத்து அணுகல், பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் இன்று (07.10.2026) ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசாத் அறக்கட்டளையின் நிர்வாகிகள் திருமதி டோலன் கங்குலி (Mrs. Dolon Ganguly), மாலினி கிருஷ்ணன், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் தலைவர் முனைவர் லெஜிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
பெண்கள் தொழில்முறை ஓட்டுநர்களாக (வாகனம் மற்றும் இருசக்கர வாகனம்) மாறுவதற்கான திறன்களைப் பெறவும், அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சுதந்திரம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவும், குறிப்பாக, விளம்புநிலை சமூகங்களைச் சார்ந்த பெண்கள் கண்ணியமான வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குதல், பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளுக்கு உரிய தீர்வு காணுதல், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.