சென்னை மாநகராட்சி 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி: 15 மண்டலங்களிலும் நாளை சிறப்பு தூய்மை பணிகள்

சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிப்புப்பணியாளர்களிடம் குப்பைகளை முறையாக ஒப்படைக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.

சென்னை,

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில், நாளை சிறப்பு தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சிறப்பு தீவிர தூய்மை பணிகள்

சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரனின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில், பொதுமக்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கில், நாளை சிறப்பு தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இச்சிறப்பு தீவிர தூய்மை பணியின்கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில் பின்வரும் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட உள்ளன:

1. குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கட்டட இடிபாட்டு கழிவுகளை முழுமையாக அகற்றுதல்.

2. குடியிருப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத விளம்பர பதாகைகளை அகற்றுதல்.

3. குடியிருப்புகளை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள புற்கள், களைகள் மற்றும் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்துதல்.

4. குடியிருப்பு பகுதிகளில் உள்ள பயன்பாடற்ற பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை அகற்றுதல்.

5. பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கட்டட இடிபாட்டு கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்துதல்.

6. குடியிருப்பு கட்டடங்களுக்கு இடையிலான காலியிடங்கள் மற்றும் கட்டடங்களைச் சுற்றியுள்ள காலியிட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை முழுமையாக அகற்றுதல்.

தூய்மை பணியாளர்கள்

இப்பணிகளைத் திறம்பட மேற்கொள்ள தேவையான தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை போதிய அளவில் பணியில் ஈடுபடுத்திட மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை தீவிரமாக கண்காணித்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து தூய்மையை பராமரிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள்

மேலும், இச்சிறப்பு தீவிர தூய்மைப் பணிகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவர்களின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு ஒத்துழைப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கவும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கவும், சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிப்புப்பணியாளர்களிடம் குப்பைகளை முறையாக ஒப்படைக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.

சென்னை மாநகரின் அனைத்து மக்களுக்கும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வாழ்விடத்தை உறுதி செய்வதில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT