சென்னை,
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தலைமையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தலைமையில் இன்று ரிப்பன் கட்டட அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், துணை ஆணையாளர்கள் சித்ரா விஜயன், (வருவாய் (ம) நிதி), தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், (சுகாதாரம்),எச்.ஆர்.கௌஷிக்,(தெற்கு வட்டாரம்), எச்.ஆர்.கெளஷிக், (மத்திய வட்டாரம்) ஸ்வேதா சுமன், (வடக்கு வட்டாரம்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆய்வு செய்து பேசியதாவது:-
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளி கட்டடங்கள், சமூக நல கூடங்கள், எரிவாயு தகனமேடைகள், மயானபூமி மேம்பாட்டு பணிகள், நூலக கட்டடப் பணிகள் இறைச்சி கூடங்கள், நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமூக நல மையங்கள், மின்மாற்றிகளை சுற்றிலும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு கட்டமைப்புகள், மண்டல அலுவலங்கள், சிறு விளையாட்டு அரங்கங்கள், தூய்மை பணியாளர்களுக்கான உடை மாற்றும் அறைகள், கால்நடை காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வடகிழக்கு பருவமழையினை தொடர்ந்து பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் மேற்கொள்ளப்படும் சிறு பள்ளங்களை சீர்செய்யும் பணிகளில் 8,459 பள்ளங்கள் தார்க்கலவை மற்றும் கான்கிரீட் கலவை கொண்டு சீர்செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் அனைத்து மண்டலங்களிலும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 5 மாதங்களில் 1,49,927 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அனைத்து மண்டலங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 93 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றியும், உறுதித்தன்மை இல்லாத விளம்பரப் பேனர்களையும் உடனடியாக அகற்றிடவும் சுவரொட்டிகள் இல்லாத சென்னையை உருவாக்குகின்ற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழையினை முன்னிட்டு அலுவலர்கள் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.