சென்னை,
சென்னையின் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் இணைய விரும்பும் தன்னார்வலர்கள், மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து தங்கள் பங்களிப்பினை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழையின் போது, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மத்திய வட்டாரத்திற்குட்பட்ட 6 முதல் 10 வரையிலான மண்டலங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், தலைமையில் இன்று (15.10.2026) அண்ணாநகர் மண்டலம், செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு தன்னார்வலர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் திட்டத் தலைவர் ஹரி கிருஷ்ணன், மண்டல அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மழைக்காலத்திற்கு முன்பே வெள்ள அபாயப் பகுதிகளைக் கண்டறிதல், வார்டு வாரியாகத் தன்னார்வலர் குழுக்களை அமைத்தல், பயிற்சி வழங்குதல், மழைநீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உள்ள குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவோரை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவசரகால மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குதல், மத்திய வட்டாரத்தில் மண்டலம் 6 முதல் 10 வரை உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்ட 81 நிவாரண மையங்களும், 51 சமையல் மையங்களும் அடையாளம் காணப்பட்டு, தேவைப்படும் நேரத்தில் மக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைத்து, உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மாநகராட்சியும் தன்னார்வலர்களும் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளின் அனுபவங்களைக் கொண்டு, இந்த ஆண்டு தன்னார்வலர் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, மண்டல மற்றும் வார்டு அளவிலான கூட்டங்கள் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவும், மழைக்காலத்திற்குப் பிந்தைய பாதிப்புகளுக்கும் அலுவலர்களுடன் இணைந்து தீர்வு காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையின் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் இணைய விரும்பும் தன்னார்வலர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து தங்கள் பங்களிப்பினை வழங்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.