கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னையில் 1,520 புதிய மின்சாரப் பேருந்துகளை இயக்குவது எப்போது? டெண்டர் சிக்கலால் தொடரும் தாமதம்

சென்னையில் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை,

டெண்டரில் தொடரும் சிக்கலால் சென்னையில் 1,520 புதிய மின்சாரப் பேருந்துகளை இயக்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

1,520 மின்சாரப் பேருந்துகள்

சென்னையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மொத்தம் 1,520 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்குவதற்கு மூன்று தனித்தனி டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. இதில் 12 மீட்டர் நீள ஏசி மின்சாரப் பேருந்துகள் - 1,000, 7 மீட்டர் நீள ஏசி மின்சாரப் பேருந்துகள் - 300 மற்றும் சிறிய ரக ஏசி மின்சாரப் பேருந்துகள் - 220 (5 மீட்டர் மைக்ரோ பேருந்துகள் - 150 மற்றும் 7 மீட்டர் பேருந்துகள் - 70) அடங்கும். இவை அனைத்தும் மொத்தச் செலவு ஒப்பந்த முறையில் தனியாரால் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

டெண்டர் ஒத்திவைப்பு

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியிடப்பட்ட இந்த டெண்டர்களைத் திறக்கும் பணி போதிய நிறுவனங்கள் கலந்து கொள்ளாததால் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. குறிப்பாக, சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 12 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இணைப்புச் சேவையை வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட 220 மைக்ரோ பேருந்துகளுக்கான டெண்டரில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றதால் அதனை அதிகாரிகள் ஒத்திவைக்க நேரிட்டது.

சென்னையில் தற்போது 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிய ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்காமல், பிற புதிய உற்பத்தியாளர்களையும் களமிறக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் விரும்புகிறது. அதிக நிறுவனங்கள் போட்டியிட்டால் மட்டுமே வெளிப்படைத் தன்மையும் சிறந்த சேவையும் கிடைக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

அரசு இயக்க வலியுறுத்தல்

அதேசமயம், இத்திட்டத்தின் கீழ் பேருந்துகளை இயக்கும் நடைமுறை குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் தெரிவிக்கையில், பிற மாநிலங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.40 முதல் ரூ.70 வரை மட்டுமே செலவிடப்படும் நிலையில், தமிழகத்தில் ஒரு கிலோமீட்டருக்குச் சராசரியாக ரூ.80 வரை (ஏசி அல்லாத பேருந்துகளுக்கு ரூ.77, ஏசி பேருந்துகளுக்கு ரூ.81) தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

எனவே, இந்த ஒப்பந்தங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தனியாரை நம்பியிருக்காமல் அரசே நேரடியாகப் பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய காரணங்களால் சென்னையில் புதிய மின்சாரப் பேருந்துகளின் வருகை மேலும் சில மாதங்களுக்குத் தாமதமாகும் சூழல் நிலவுகிறது.

SCROLL FOR NEXT