தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை 
தமிழக செய்திகள்

சென்னை புழல் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து

ரசாயனப் பொருட்கள் எரிந்ததன் காரணமாக, புழல் மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது.

சென்னை,

சென்னை புழல் தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கச்சாப் பொருட்களும் தொழிற்சாலைக் கட்டடமும் முற்றிலும் எரிந்து கருகின.

தொழிற்சாலையில் தீ விபத்து

சென்னை புழலில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று (சனிக்கிழமை) தொழிற்சாலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒரு பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

தீ மளமளவென பரவியதைக் கண்ட அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள், சமயோசிதமாக செயல்பட்டு உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறினர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு, யாருக்கும் காயங்கள் ஏதுமின்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

வெடித்து சிதறிய ரசாயனப் பேரல்கள்

தொழிற்சாலையின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருந்த பெயிண்ட், கச்சாப் பொருட்கள் மற்றும் ரசாயனப் பேரல்கள் மீது தீ பரவியதால், அவை பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதன் காரணமாக தீயின் வீரியம் பல மடங்கு அதிகரித்து, மொத்த கட்டடமும் தீயில் கருகின. இதனால் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பொருள்கள் சேதமடைந்தன.

கரும்புகையால் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகள்

ரசாயனப் பொருட்கள் எரிந்ததன் காரணமாக, புழல் மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை வறட்சி மற்றும் லேசான மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

போக்குவரத்து மாற்றம்

தகவலறிந்து ரெட்கில்ஸ், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தன. புகைமூட்டம் மற்றும் மீட்புப் பணிகள் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

போலீசார் விசாரணை

மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறதா? அல்லது வேறு ஏதும் காரணங்களா? என்ற பல கோணத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT