கொலை முயற்சியில் கைதான 5 இளைஞர்கள் 
தமிழக செய்திகள்

சென்னை: முன்னாள் காதலியை வெட்ட முயன்ற இளைஞர் கைது

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தடுத்ததால், அந்தப் பெண்ணும் அவரது காதலனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை,

சென்னையை அடுத்த பெரம்பூரில், முன்னாள் காதலியை கத்தியால் வெட்ட முயன்ற இளைஞர் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் ஆத்திரம்

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இமான் (வயது 22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். எனவே அந்தப் பெண் வேறொரு இளைஞரை காதலிக்கத் தொடங்கினார். மேலும், தனது புதிய காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அந்தப் பெண் பதிவிட்டுள்ளார்.

நடுரோட்டில் தாக்குதல் முயற்சி

அதைப்பார்த்து ஆத்திரமடைந்த இமான், தனது நண்பர்களான பரத் (வயது 24), ராகுல் (வயது 19), பிலிப்ஸ் (வயது 20) மற்றும் சிஜன் (வயது 23) ஆகியோருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பின்தொடர்ந்தார். பெரம்பூர் பகுதியில் அப்பெண் தனது புதிய காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த இமான் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டி, வெட்ட முயன்றனர்.

5 பேர் கைது

இதையடுத்து அந்த காதல் ஜோடி அலறிக் கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தடுத்ததால், அந்தப் பெண்ணும் அவரது காதலனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பொதுமக்கள் கூடுவதைக் கண்டு இமான் மற்றும் அவரது நண்பர்கள் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருவிக்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த முதன்மை குற்றவாளி இமான் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 5 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.