தமிழக செய்திகள்

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடி சுட்டுப்பிடிப்பு

22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை வண்டலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

சென்னை வண்டலூர் அருகே கரசங்கால் பகுதியில் பெரிய அளவில் கஞ்சா விற்பனை நடைபெறப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் கரசங்கால் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 நபர்களை போலீசார் நெருங்கி சென்றபோது அவர்கள் கையில் வைத்திருந்த பையுடன் இருவரும் அங்கிருந்து ஓடிச்சென்றார்.

துப்பாக்கி சூடு

இதையடுத்து, இருவரையும் விரட்டி சென்ற போலீசார், ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரை தாக்கியுள்ளார். இதனால் அவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் வண்டலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த ரவுடிகளான செல்வகுமார், கனகராஜ் என்பது தெரியவந்தது. மேலும், டவுடிகள் வைத்திருந்த பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரவுடி செல்வகுமாரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், ரவுடிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்? இவர்கள் யாருக்கு விற்பனை செய்ய முற்பட்டனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.