சென்னை,
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு ஊழியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ராஜ்பந்தமதி விநாயகர் ஆலயத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையடுத்து மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் சென்றபோது இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறியது.
இதில், அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் சரமாரியாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ராமாபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.