சென்னை,
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், கூலர் ஸ்ட்ரீட்ஸ் டிசைன் ஜாம் – சென்னை (Cooler Streets Design Jam-Chennai) என்ற 'பசுமையான தெருக்கள், குளிர்ச்சியான நகரங்கள்' வடிவமைப்பு முகாமினை பார்வையிட்டு, குழுவினருடன் கலந்துரையாடினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று (21.11.2026) ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற “கூலர் ஸ்ட்ரீட்ஸ் டிசைன் ஜாம் – சென்னை” (Cooler Streets Design Jam-Chennai) என்ற 'பசுமையான தெருக்கள், குளிர்ச்சியான நகரங்கள்' வடிவமைப்பு முகாமினை பார்வையிட்டு, இந்நிகழ்வில் பங்கேற்ற ஐந்து குழுக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, ஆரோவில் கன்சல்டிங், கூல் கோலிஷன், ஓபன் சிட்டி மற்றும் சுவிட்சர்லாந்து தூதரகம் ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் நடத்தப்பட்டது.
இக்குழுக்கள் ஒவ்வொன்றும் சென்னையில் அடையாளம் காணப்பட்ட ஒரு குறிப்பிட்ட சாலையை மறுவடிவமைப்பு செய்வதற்கான திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த குழுவில் கட்டட கலைஞர்கள், நகர்ப்புற வடிவமைப்பாளர்கள், ஜிஐஎஸ் மற்றும் காலநிலை-தரவு வல்லுநர்கள், மாணவர்கள், குடிமை சமூக குழுக்கள், குடியிருப்போர் குழுக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகள் காரணமாக, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, சென்னையில் அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் உள்ள ஒரு தெருவை தேர்ந்தெடுத்து, அதனை அதிக குளிர்ச்சியானதாகவும், பசுமையானதாகவும், பாதசாரிகள் எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதற்கான வடிவமைப்பு தீர்வுகளை உருவாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் 3 முதல் 5 நபர்கள் கொண்ட குழுக்களாக இணைந்து, சென்னையில் அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து, இயற்கை சார்ந்த தீர்வுகளின் அடிப்படையில் தெருக்களை மறுவடிவமைப்பதற்கான கருத்துரு வடிவமைப்பை (Concept Design) உருவாக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவை அதிக குளிர்ச்சியானதாக மாற்றுவதற்கு ஏதுவாக, நிழல் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரித்தல்: பொருத்தமான மர வகைகளை தேர்ந்தெடுத்தல், மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்களை திட்டமிடுதல் மற்றும் அவற்றை பராமரிப்பதற்கான திட்டங்களை உருவாக்குதல்.
நீர் ஊடுருவக்கூடிய தரைத்தள பொருட்கள், வெப்பத்தை பிரதிபலிக்கும் பொருட்கள் மற்றும் குறைந்த வெப்பத்தை உறிஞ்சும் கட்டுமான பொருட்களை பயன்படுத்துதல்.
பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் நடைபாதைகளை மேம்படுத்துதல்.
வெப்பநிலை தொடர்பான தரவுகள், கள ஆய்வுகள் மற்றும் உள்ளூர் மக்களின் அனுபவங்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் வடிவமைப்புத் தீர்வுகளை முன்வைத்தல் உள்ளிட்ட புதுமையான தீர்வுகளை முன்மொழியலாம்.
இந்த குழுக்களில் உள்ள பங்கேற்பாளர்கள் முன்வைத்த புதுமையான சிந்தனைகள் மற்றும் யோசனைகளை பாராட்டிய மாநகராட்சி ஆணையாளர், சென்னையின் தட்பவெப்ப நிலை மற்றும் உள்ளூர் சூழலுக்கு ஏற்ற வகையில், நடைமுறைக்கு சாத்தியமான வடிவமைப்பு தீர்வுகளை உருவாக்கி, நகரின் தெருக்களை அதிக குளிர்ச்சியானதாகவும், பசுமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பாதசாரிகளுக்கு உகந்ததாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.
மேலும், தெருக்களின் வடிவமைப்பில் காலநிலை மாற்றத்தை தாங்கும் கட்டமைப்பு வசதிகள், நகர்ப்புற பசுமை மேம்பாடு, நிலையான போக்குவரத்து முறைகள் மற்றும் அனைவரும் சமமாக பயன்படுத்தக்கூடிய பொது இடங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்த வடிவமைப்பு முகாமானது, வடிவமைப்பாளர்கள், நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் மற்றும் தொடர்புடைய பிற பங்குதாரர்கள் ஒருங்கிணைந்து தங்களது கருத்துகளை பரிமாறி கொள்ளவும், நிபுணர்களுடன் கலந்துரையாடவும், சென்னையில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற மற்றும் மக்களுக்கு உகந்த தெருக்களை உருவாக்குவதற்கான புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் சிறந்த கூட்டு முயற்சிக்கான தளமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.